Friday, 31 July 2009

மூதாட்டி தந்த தன்னம்பிக்கை! - டாக்டர் கலாம்



ந்தமிகப்பெரும் அழிவை யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை. அதைப் போன்ற ஓர் இயற்கைப் பேரழிவை நவீன சரித்திரத்தில் இந்தியா கண்டதும் இல்லை. மனமகிழ்ச்சியைத் தரும் மக்களின் நண்பனாய், மீன் வளத்தை அள்ளித் தரும் தோழனாய், கடற்கரை வாழ் மக்களின் மனதோடும் வாழ்வோடும் கலந்திருந்த அற்புதமான கடல், திடீரென்று இப்படி பிரமாண்டமாய்ப் பொங்கித் தன் அலை என்கிற வலையால் ஆயிரக்கணக்கான உயிர்களை வாரிச் சுருட்டிக் கொண்டு போகும் என்பது யாரும் நினைத்துக் கூடப் பார்த்திராத ஒன்று.

இந்தோனேஷியாவின் கடல் அடியில் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தின் விளைவால் எழுந்த ராட்சஸ அலை, மணிக்கு 500 கிலோ மீட்டர் வேகத்தில், சுமார் 2500 கி. மீ. தூரம் பயணம் செய்து செல்லும் வழியில் இருந்த அந்தமான் தீவுகள், இலங்கைத் தீவு, தமிழ்நாட்டின் பல கடற்கரைப் பிரதேசங்கள், கேரளா, ஆந்திரம் என்று பரவி தன் கொடுங்கோபத்தைக் காட்டி விட்டு, ஆப்பிரிக்காவின் சோமாலியா வரை சென்றுதான் ஓய்ந்தது. அந்தக் கொடும் பயணத்தில் அது காவு கொண்ட உயிர்கள் பல்லாயிரம். தமிழ்நாட்டின் நாகப்பட்டினம், சென்னை, கடலூர், புதுவை போன்ற இடங்களில் எண்ணற்ற அப்பாவி மக்கள் அதன் கோரதாண்டவத்துக்கு இரையானார்கள். எல்லாமே ஒருசில நிமிடங்களுக்குள் நடந்து முடிந்துவிட்டப் பேரழிவு!

ஆனாலும் ஏன் இந்தக் கடல்சீற்றம், திடீரென்று இயற்கைக்கு என்ன நேர்ந்தது, இதைத் தடுத்திருக்க முடியாதா போன்ற எண்ணங்கள் எல்லாம் உடனே விடை கிடைக்க முடியாத அளவுக்கு இருந்தன. ஏனென்றால் சுனாமி என்பது நமக்கு மிகவும் புதிதான ஒரு பேரழிவு. ஜப்பானில் இந்தச் சுனாமி அடிக்கடி நடக்கக்கூடிய ஒன்று என்கிற செய்திகள் எல்லாம் மெதுவாக வரத் தொடங்கின.

ஆனால் கடல் பொங்கி தண்ணீர் நகரத்துக்குள் நுழைந்த காட்சிகளை தொலைக்காட்சியில் கண்ட போது என் மனம் திடுக்கிட்டது. இது ஒரு சாதாரண இயற்கை அழிவு இல்லை, இது பேரிடர் என்பது புரிந்ததும் என்னால் ராஷ்டிரபதி பவனில் அமர்ந்திருக்கவே முடியவில்லை. உடனே பிரதமர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு உடனுக்குடன் தமிழ்நாடு அரசாங்கத்துக்கு வேண்டிய உதவிகளைச் செய்யுமாறு சொன்னேன். அவர்களும் தாமதமின்றி மீட்புப் பணிகளையும் நிவாரணப் பணிகளையும் செய்யத் துவங்கினார்கள். தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவையும் உடனே தொடர்பு கொண்டு "உங்களுக்கு வேண்டிய உதவிகளை மத்திய அரசு செய்ய உதவி செய்கிறேன் என்றேன்'. அவரும் மின்னல் வேகத்தில் பணிகளைத் தொடங்கினார். சிறப்பாக செயல்பட்டார்.

நேரம் செல்லச் செல்லத்தான் அந்த பயங்கர சுனாமி எத்தனை பெரிய அளவில் அழியாட்டம் போட்டிருக்கிறது என்கிற செய்திகள் தெரிய ஆரம்பித்தன. காலையில் மெரீனா பீச்சில் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருந்த சிறுவர்களிலிருந்து வேளாங்கண்ணியில் பிரார்த்தனைக்கு வந்திருந்த நூற்றுக்கணக்கான பக்தர்களை, மீனவர் குடும்பத்தினரை, சுற்றுலாப் பயணிகளை இரக்கமில்லாத அலை இழுத்துச் சென்றிருப்பது தெரிய வந்ததும் நான் ஆழ்ந்த சோகத்தினை அடைந்தேன். நம்மை எல்லாம் அதிர்ச்சியில் உறையச் செய்த அழிவுதான் இது என்றாலும், உடனடியாக ஆக்ஷனில் இறங்க வேண்டிய தருணமும் அதுதானே?

என் அலுவலர்களும், அணியைச் சேர்ந்தவர்களும் உடனடியாக விரைந்து செயல்பட்டார்கள். இதைப் போன்ற எதிர்பாராத அழிவுகளின் போது நிவாரணப் பணிகளில் ஈடுபடக்கூடிய பல நிறுவனங்களை அழைத்துப் பேசினேன். என்னால் இயன்றவரை தேசமெங்கும் செய்தி கேட்டுப் பதறிய பல அதிகாரிகளை, தொண்டு நிறுவன ஊழியர்களை ஒருங்கிணைத்து தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைத்தேன். தமிழக அரசுக்கு விரைவாக மீட்புப் பணிகளுக்கான உதவிகள் கிடைக்கிறதா என்று உதவியாளர்களை வைத்து கண்காணித்தபடி இருந்தேன். பல கடல்சார் விஞ்ஞானிகளுடன் பேசினேன். இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையைச் சார்ந்தவர்களை அழைத்து, சுனாமி எச்சரிக்கை ஆணையத்தை எவ்வளவு விரைவில் அமைக்க முடியுமோ அவ்வளவு விரைவில் வடிவமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். மீட்புப்பணிகளைப் பற்றிய செய்திகள் என்னை வந்தடைந்தபடி இருந்தன.

சுனாமி என்கிற இந்த ஒரே ஒரு சம்பவம், சுவிட்ஸர்லாந்திலும் ஐஸ்லாந்திலும் நான் கண்ட இயற்கைப் பேரழிவு பாதுகாப்பு மையம் போன்றவற்றை இந்தியாவில் உடனே அமைக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியது. சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை உடனே பார்வையிட்டு பாதிக்கப்பட்ட வர்களுக்கு ஆறுதல் சொல்ல வேண் டும் என்றுதான் மிகவும் விரும்பினேன். ஆனால் என்னுடைய சக அதிகாரி களிடம் பேசியதைத் தொடர்ந்து, அப்படி உடனே சென்று மீட்பு பணிக்கும், மறுவாழ்வு பணிகளுக் கும் இடையூறாக இருக்க வேண் டாம் என்று முடிவு செய்தேன். நிவாரணப்பணிகள் முழுவேகத்தில் நடந்து கொண்டிருந்த சமயத்தில் நான் அங்கே செல்வது அப்பணி களுக்குச் சிறிய அளவிலேனும் தொந்தரவு ஏற்படுத்துவதை நான் விரும்பவில்லை.

அந்த நேரத்தில் நிவாரணப் பணிகளில் தமிழ்நாடு அரசு மிகவும் சிறப்பாக செயல்பட்டது. உலகத் தின் பரிவும், அவசர உதவிகளும் அங்கே குவிந்து கொண்டிருந்த நிலையில், அவற்றைப் பாதிக்கப் பட்ட மக்கள் பெறுவதற்கான வழிவகை களை மின்னல் வேகத்தில் அரசு செய்து கொண்டிருந்தது. அந்த வேகமான நடவடிக்கைகள் சோகமான நிலை யிலும் சிறிய ஆறுதல்களைக் கொடுத் துக் கொண்டிருந்தன. குறிப்பாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியாளர் திரு ராதாகிருஷ்ணனும், கடலூர் மாவட்ட ஆட்சியாளர் ககன் தீப் சிங் பேடியும் அங்கே சுனாமியால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த கடலோர மனிதர்களுக்கான வாழ்வாதாரங் களை மறுபடி பெற்றுத் தருவதற்கு ராப்பகலாக உழைத்தார்கள். ஒரு கணமும் எங்கும் தாமதியாமல் சுனாமியால் பாதிக்கப் பட்ட பகுதிகளைச் சுற்றிச் சுற்றி வந்தார்கள்.

நான் அந்தப் பகுதி மக்களை அடுத்து சந்திக்க வந்த போது மிகவும் ஆச்சர்யப் பட வைக்கும் முறையில் அவர்கள் இயல்பான வாழ்க்கைக்கு ஓரளவு திரும்பியிருந்தார்கள். தங்களைச் சேர்ந்த பலரின் இன்னுயிர் இழப்பு கள் என்றைக்குமே ஈடு செய்ய முடியாதவை என்றாலும், பொருளாதார ரீதியாகவும், வாழ் வதற்கான அடிப்படை விஷயங்களைப் பெறுவ திலும் அவர்களுக்கு உடனுக்குடன் நிவாரண உதவிகள் கிடைக்கப் பெற்றது மிக்க ஆறுத லாக இருந்தது. மெல்ல மெல்ல அவர்கள் ஒரு அழிவின் சாம்பலில் இருந்து மீண்டு வந்து கொண்டிருந்தார்கள்.

வாழ்வின் ஓரங்களில் வசிக்கக் கூடிய மீனவர்கள், தங்கள் கணவர்களை, குழந்தைகளை, மனைவியரை இழந்த வர்கள், ஏழை விவசாயிகள் என்று பலரை நான் சந்தித்த போது இந்த அப்பாவி மக்களை கடல் அநியாயமாகப் புரட்டிப் போட்டு விட்டதே என்கிற தாங்க இயலாத துயரம் ஏற்பட்டதென்னவோ உண்மை. ஆனால் அவர்களின் கண் களில் எப்படிப் பட்ட துன்பம் வந்தாலும் அதை எதிர்கொள் ளக்கூடிய துணிவு துளிர் விட்டிருந்ததை நான் பார்த்தேன்.

அப்போது அந்த கூட்டத்திலிருந்து என்னை நோக்கி தள்ளாடிய உருவத்துடன் நடந்து வந்தார் ஒரு 65- 70 வயது மூதாட்டி. அருகில் வந்தவர் என் கரத்தைப் பற்றிக் கொண்டார். ""கலாம், கடல்தான் எங்கள் வாழ்க்கை.. உயிர்.. எல்லாமே.. ஆனால் இப்படி நடந்து விட்டதற்காக நாங்கள் கடலைக் கண்டோ, அதன் பிரமாண்டமான சுனாமி அலைகளைக் கண்டோ பயப்படவில்லை.. எங்களின் வெற்றிக்கான போராட்ட உணர்வு, சுனாமி ஏற்படுத்தக் கூடிய தோல்வி உணர்வை ஜெயித்து விட்டது..''’’

இதைச் சொல்லும் போது அந்த மூதாட்டியின் விழி களில் கண்ணீர் தேங்கியிருந்தது. எத்தகைய அழிவிலிருந்தும் மனிதன் மீண்டு வருவான். புதிய வாழ்க்கையை அமைத்துக் கொள்வான். தோல்வி தன்னை துவண்டுபோகச் செய்ய விடாத மன உறுதிதான் அவன் சிறப்பு என்கிற உண்மை யை, நம்பிக்கையை அந்த மூதாட்டியின் வார்த்தைகள் எனக்கு உணர்த்தின. உங்களுக்கும்தானே!

(தொடரும்)




ள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திவிடும் பிள்ளைகளை மீண்டும் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்கிற கருத்தை மையமாகக் கொண்டு "குருத்து' என்ற டாக்குமெண்ட்ரியை தயாரித்தோம்.

கல்வியின் அவசியத்தை வலியுறுத்த டாக்டர் அப்துல் கலாமின் வாழ்க்கையையும் குருத்து டாக்குமெண்ட்ரியில் பதிவு செய்தோம். அப்போது, இந்தியா முழுவதும் உள்ள 5 லட்சம் கிராமங்களில் இத்தனை சதவீதம் பிள்ளைகள் படிப்பை பாதியில் நிறுத்தியிருக்கிறார்கள்... அதில் பெண் பிள்ளைகள் எண் ணிக்கை அதிகம். உத்திரப்பிரதேச மாநிலத் தில்தான் நிலைமை மோசம் என்று பல்வேறு தகவல்களை புள்ளி விபரங்களோடு நீண்டநேரம் பேசியபோது அசந்து விட்டேன்.

குடியரசுத்தலைவர் மாளி கையில் உள்ள மொகல் தோட் டத்துக்கு அழைத்துச் சென்று அங்கிருந்த ஞானக்குடிலை காண்பித்தார். பௌர்ணமி நிலவு வெளிச்சத்தில் ரம்யமான அந்த சூழலில் அவரோடு பேசிக் கொண்டிருந்த போது, நமது தேசத்தின் குடியரசுத் தலைவருடன் பேசிக்கொண்டிருக் கிறோம் என்று தோன்றவில்லை. தாத்தாவுடன் பேசுகிறோம் என்று எண்ணும் அளவிற்கு எளிமையாக இருந்தார் டாக்டர் கலாம்.

எவ்வளவு உயரத்துக்குப் போனாலும் சக மனிதர்களை சமமாக மதிக்கும் பண்பினை கடைபிடிக்க வேண்டும் என்கிற மிகப்பெரிய பாடத்தை அன்று நான் அவரிடம் கற்றுக்கொண்டேன்.

நன்றி: நக்கீரன்

தேவை லட்சியத் தலைவர்கள்! - டாக்டர் கலாம்



ராமநாதபுரம்மாவட்ட மக்கள் வரலாற்றில் எத்தனையோ இன்னல்களை கண்டிருக்கிறார்கள். அவற்றையெல்லாம் எதிர்த்துப் போராடியிருக்கிறார்கள். இந்து, முஸ்லிம், கிறிஸ்துவ மதங்களைச் சார்ந்த மக்களாக அவர்கள் இருந்தாலும் பொதுப் பிரச்னை என்று வரும்போது அவர்கள் அமைதியாக ஒன்றுபடுவார்கள். பலநூறு ஆண்டுகளாக இராமநாதபுரத்திலும் இராமேஸ்வரம் தீவிலும் அமைதியும் சகோ தரத்துவமும் நீடிப்பதற்கான ரகசியம் அதுதான். மனிதர்களைச் சமமாகக் கருதவும், சகோதரத்துவத்தை பேணுவதைப் பற்றியும் நம்முடைய அண்டை நாடுகள் இந்த மக்களிடமிருந்து பாடம் கற்கலாம்.

இந்தியாவின் கடைக்கோடித் தீவான இராமேஸ்வரத்தில் தொடங்கும் இந்த வேறுபாடுகளைக் களைந்த ஒற்றுமை உணர்வு நம் தேசமெங்கும் கண்ணுக்குத் தெரியாத இழைகளாகப் பின்னிப் பிணைந்திருக்கிறது. வளர்ந்து வரும் நாடுகள் சுபிட்சத்தையும் சமாதானத்தையும் காண வேண்டுமென்றால் அதற்கு ஒரே வழி, பல்வேறு இனம், மொழி, மதங்கள், கலாச்சாரங்களைக் கொண்ட தன் மக்களைச் சமமாக நடத்துவதுதான். அவர்களுக்குத் தேவையான வேலை வாய்ப்பு, அடிப்படைத் தேவைகள், சமூக பாதுகாப்பு, மருத்துவ ஆரோக்கிய வசதிகள், சமச்சீர் கல்வி , மனித ஜனநாயக உரிமைகள் போன்றவற்றை சமமாகப் பிரித்து அளிப்பதன் மூலம் மட்டுமே நாடு மேன்மையை அடைய முடியும் என்று நான் தீர்மானமாக நம்புகிறேன்.

அந்த இலட்சிய கட்டத்தை ஒவ்வொரு நாடும் அடைய லட்சியத் தலைவர்கள் தேவை. தங்கள் மக்கள் அனைவரையும் ஒன்றாகக் கரு தும் மேன்மையான கொள்கை கொண்டவராக அந்தத் தலைவர்கள் இருக்க வேண்டும்.

உலகிலும் நம் அண்டைநாடுகளிலும் நடந்து வரும் பல நிகழ்வுகளைக் காணும்போது மனித சமுதாயம் மிக நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருப்பதை பெருமூச்சுடன் புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு தனிமனிதனை விட நாடு முக்கியம், ஒரு நாட்டை விட உலக அமைதி முக்கியம். இந்த உலக அமைதியை எட்டுவதற்கு உலக நாடுகளின் தலைவர்கள், ஒரு கட்டத்துக்கு மேல் உயர வேண்டும். ஒருமித்த கருத்துணர்வை அவர்கள் எட்ட வேண்டும். ஒவ்வொரு முறை என் சொந்த ஊருக்குச் சென்று அம்மக்களைக் காணும் போதெல்லாம் இந்த உணர்வே எனக்கு ஏற்படுகிறது.

அந்த விஷயத் தைப் பொறுத்தவரை, இராமநாதபுரத்து மக்கள் உலகுக்கே வழிகாட்டியாக இருக் கிறார்கள் என்பதை என் னால் உறுதியாகச் சொல்ல முடியும். சொந்த ஊர் என்கிற பாசத்துக்காக இதைச் சொல்லவில்லை. இது வரலாற்றில் மறுக்க முடியாத உண்மையும் கூட.

ன்னால் மறக்கவே முடியாத, என்றைக் கும் என் நினைவுகளை பாதிக்கும் பயணம் கும்பகோணம் பயணம்தான். கொடுந்தீ விபத்து 96 பள்ளிக்குழந்தைகளை பலிகொண்ட அந்த கோரச் சம்பவத்தை அடுத்து, சம்பந்தப்பட்ட பெற்றோரைச் சந்திக்க நான் அங்கே சென்றிருந் தேன். மாவட்ட ஆட்சியாளர் திரு. ராதா கிருஷ்ணன் அந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார். மனம் கனக்க அந்தத் துயர பூமிக்குப் பயணம் செய்தேன்.

தங்களின் உயிருக்குயிரான பச்சிளம் குழந்தைகளை தீயின் செந்நாக்குகளுக்கு பலி கொடுத்த அந்தப் பெற்றோர்களின் துயரம் சொல்லில் விளங்காதது. அவர்களின் எதிரே நான் ஸ்தம்பித்துப் போய் அமர்ந்திருந்தேன். என்ன வார்த்தைகள் சொல்லி அவர்களைத் தேற்றுவது! என்ன கொடுத்தாலும் அவர்கள் இழந்ததுக்கு ஒப்பாகுமா? அந்த மழலைச் செல்வங்கள் திரும்பி வரவா போகிறார்கள் போன்ற எண்ணங்கள் என்னை அலைக்கழித்தன.

யாரும் ஏதும் பேச முடியாத சில நிமிடங் கள் மனசாட்சியை உலுக்கும் மௌனத்தில் கழிந் தன. அவர்களின் கண்ணீர் வழிந்தபடி இருந்தது.

அவர்களைத் தேற்றும் பொருட்டு ஒவ் வொருவராகச் சந்தித்துப் பேச ஆரம்பித்தேன். அவர்கள் தங்கள் துயரை நடுங்கும் வார்த்தை களில் மெதுவாகக் கொட்ட ஆரம்பித்தார்கள். அவர்களிடம் கோபம் இருந்தது. வலி இருந்தது. ஆனாலும் ஒருமித்த குரலில் அவர்கள் சொன்ன ஒரு விஷயம் என்னை உலுக்கி எடுத்தது.

"எங்கள் குழந்தைகளுக்கு நேர்ந்த கொடுமை வேறு யாருக்கும் ஏற்படக்கூடாது..ஐயா, இதை மட்டும் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்..வேறு யாருக்கும் இந்தக் கொடுமை நடக்கக் கூடாது..'’’

-என்ன வார்த்தைகள் பார்த்தீர்களா? ஆழ்ந்த சோகத்திலும் வெறுப்புணர்ச்சியிலும் கூட அவர்களின் வார்த்தையில் வெளிப்பட்ட மனிதநேயமும் சகமனிதர்கள் மீது கொண்ட அக்கறையும் என்னை உணர்ச்சிப் பெருக்கில் கலங்க வைத்தன. இதுதானே நம் பாரம்பரிய நாகரீகத்தின் மேன்மையான பண்பு. தங்கள் சோகத்தையும் மீறி இது மற்றவர்களுக்கு நடந்து விடக்கூடாது என்று எண்ணுவது எத்தனை உயர்ந்த பண்பு.

இதுவல்லவோ மனிதநேயம்! இதுதானே சகமனிதன் மீது காட்டும் நிஜமான அன்பு!

அந்த வார்த்தைகள் என் மனதில் ஆழமாகப் பதிந்தன. ஆம்! இதைப் போன்ற கொடுந்துயரம் வேறு யாருக்கும் நடந்து விடவே கூடாது. நடக்க விடக்கூடாது.

அரசாங்கத்துக்கு இதைப் போன்ற கொடுமை மறுபடி நடந்துவிடாதபடிக்கு நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரைத்தேன். எத்தனையோ மேடைகளில் இதைப்பற்றிப் பேசி , விழிப்புணர்வுடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டேன்.

அப்போது என் மனதில் தோன்றிய எண்ணம் இதுதான். அதன் விளைவாக என் ஆழ் மனதில் தோன்றிய கவிதையை தீவிபத்தில் இறந்த அந்த குழந்தைகளின் நினைவாக சமர்ப்பித்தேன்.

ஓ இளம் தளிர்களே, அன்புக்குரிய இளம் தளிர்களே!
உங்களின் பெற்றோர்கள் பெருமைக்குரிய கனவுகளை
உங்களுக்காக வைத்திருந்தார்கள்!
உங்களின் சொந்தக் கனவுகளும்
உங்களுக்குள்ளே அமிழ்ந்திருந்தன!



ஆனால் அக்னி உங்களையும்
அந்தக் கனவுகளையும் அழித்தது..

கடவுளின் தெய்வீகமான இடத்துக்கு
உங்களை அழைத்துச் சென்றது!


எப்போதும் மறைந்து போன பெற்றோர்களைப் பிள்ளைகள் புதைப்பார்கள்!
ஆனால் கும்பகோணம் அந்தக் கொடுங் காட்சியைக் கண்டது..
அழும் பெற்றோர்கள் தங்கள் துளிர்களைப் புதைக்கும் காட்சி அது..


ஓ கடவுளே..அந்தச் சின்னஞ்சிறு தளிர்களிடம் கருணை காட்டுங்கள்..
உங்கள் அன்புக்குரிய புனித இடத்தில் அவர்களை வைத்திருங்கள்..
சோகத்தில் ஆழ்ந்திருக்கும் பெற்றோர்களுக்கு ஆறுதலைக் கொடுங்கள்..
இந்த வெறுமையிலிருந்து விடுபட மனபலத்தைக் கொடுங்கள்..


உங்கள் கனிவும் கருணையும் எல்லா உயிர்களையும் காப்பாற்றட்டும்..

வலிகள் மறந்து அவர்கள் கண்ணீர் துடைக்கப்படட்டும்..


ஓ கடவுளே அந்தச் சின்னஞ்சிறு தளிர்களிடம் கருணை காட்டுங்கள்!

இதைப்போன்ற எத்தனை யோ பேரழிவுகளுக்கான தீர்வு களை நாம், எண்ணற்ற உயிர் களைத் தியாகம் செய்துதானே இனம் காண்கிறோம். இதைப் போன்ற பிரச்னைகளை வரும்முன் காப்பதற்கான தீர்க்க தரிசனத் தையும், செயல்படும் துணிவையும் நம்முடைய தலைவர்களுக்கும், அதை செயல்படுத்தும் அதிகாரி களுக்கும் தருமாறு கடவுளை நான் அப்போது வேண்டிக்கொண் டேன்.

இதைப்போலவே மற்றொரு பேரழிவு நிகழ்வும் என்னை உலுக்கி எடுத்தது. அதுவும் பல் வேறு உயிர்களை விழுங்கிய பயங்கர நிகழ்வுதான்.

2004-ம் வருடம், டிசம்பர் மாதம் 24-ம் தேதி காலை.

நான் ராஷ்டிரபதி பவனில் உள்ள மொகல் தோட்டத்தில் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தேன்.

என்னுடைய உதவியாளர் பொன்ராஜ் ஓடி வந்தார்.தொலைபேசியில் வந்த தகவலை தெரிவித்தார்.

""ஐயா, தமிழ்நாட்டில் கடல் பொங்கி விட்டதாம்.. எழுந்து வந்த ராட்சத அலைகள் எண்ணற்ற உயிர்களை பலிகொண்டுவிட்டதாம். சென்னை, பாண்டி, கடலூர், நாகப்பட்டினம் உள்பட பல இடங்களில் கடல்அலை பிரமாண்டமாக எழுந்து வந்து பல உயிர்களை காவு வாங்கிவிட்டதாகச் செய்தி..''

நான் அதிர்ந்து போனேன். இதைப்போன்ற ஒரு இயற்கைச் சீற்றத்தை தமிழ்நாடு கண்டதே இல்லை. தனுஷ்கோடிப் புயல் என் நினைவில் இருந்தாலும், புயல், மழை, சூறாவளி போன்ற எதுவுமே இல்லாத ஒரு சூழலில் திடீரென்று கடல் அலைகள் ஆழிப்பேரலை யாக மாறி இத்தனை கொடூர ஆட்டம் போடுமா என்று மலைப்பாக இருந்தது. இது என்ன? இந்தப் பேரழிவுக்கு என்ன பெயர்?

சுனாமி!

உலகையே உலுக்கிய பேரழிவு! அதன் நீங் காத கொடும் நினைவுகள்!

(தொடரும்)
நன்றி: நக்கீரன்

முடியும் என்று நீ நம்பு! -டாக்டர் அப்துல் கலாம்



து 1950 வருடங்களில் நிகழ்ந்த சம்பவம்...

தமிழ்நாடுமுழுவதும் சூறாவளியாகப் பயணம் செய்து மக்களைத் தன்னுடைய சாதுர்யமான பேச்சினால் கவர்ந்து கொண்டி ருந்தார் அண்ணா. அவருடைய எரிதழலும், தென்றல் காற்றும் கலந்த அறிவார்ந்த பேச்சு மக்களிடையே ஒரு பெரிய எழுச்சியையே ஏற்படுத்திக் கொண்டிருந்தது. இராமநாதபுரம் ஸ்வார்ட்ஸ் பள்ளி மாணவர்களாகிய நாங்களும் மகுடிக்கு அடங்கிய பாம்பு போல் அந்த வசீகரப் பேச்சில் கட்டுண்டு கிடந்தோம்.

அவரை எப்படியாவது எங்களுடைய பள்ளி விழாவுக்கு அழைத்து வந்து பேச வைக்க வேண் டும் என்கிற ஆசை தணியாத தாகமாய் மாறியது. ஒருநாள் நானும் சக மாணவர்கள் சிலரும் சென்னைக்கு ரயில் ஏறி விட்டோம். அறிஞர் அண்ணாவின் வீட்டைக் கண்டுபிடித்து அவரைச் சந்தித்தும் விட்டோம். மிக எளிமையான வீட்டில், ரொம்ப சிம்பிளாக இருந்த அந்த மாபெரும் தலைவரை முதல் முதலாகப் பார்த்த போது எனக்கு வியப்பில் மூச்சடைத்தது. இவரா மேடைகளில் புயல் கிளப்பும் பேச்சுக்களை அனல் பறக்க விடுபவர் என்கிற எண்ணம் ஏற்பட்டது.

ஆனால் அந்த கரகரப்பான மயக்கும் குரல் அருகில் ஒலித்ததை நான் நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். கைலி, கை வைத்த பனியன் மற்றும் ஷேவ் செய் யாத முகத்துடன் இருந்த அண்ணா, "இப்போதைக்கு என்னால் அங்கே வர முடி யாது'’என்று சொன்னதும் எங்களுக்கு ஏமாற்றமாக இருந் தது. ஆனாலும் நாங்கள் விடாப்பிடியாக "தாங்கள் கண்டிப்பாக வந்தே ஆக வேண்டும்'’என்று பிடிவாதம் பிடித்தோம். மெலிதாகப் புன்னகை புரிந்த அவர் “"சரி, திருவையாருக்குச் சுற்றுப் பயணம் வரும்போது உங்கள் பள்ளிக்கு அவசியம் வருகிறேன்' என்று உறுதி மொழி அளித்து எங்களை அனுப்பி வைத்தார். நாங்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

திரும்பும் வழி எங்கும் அண்ணா எங்கள் பள்ளிக்கு வந்து பேசுவது போன்ற கனவுகளே வந்து கொண்டிருந்தன. இங்கே சிக்கல் ஒன்று இருந்தது. நாங்கள் சென்னைக்குக் கிளம்பி வந்து அண்ணா அவர்களைப் பார்த்ததோ, அவர் எங்கள் பள்ளிக்கு வர ஒப்புக் கொண்ட தோ எங்கள் பள்ளித் தலைமை ஆசிரியருக்குத் தெரியாது. அன்றிருந்த திராவிட இயக்க அரசியல் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருந்தது. தலைமை ஆசிரியருக்குத் தெரிந்தால் திட்டுவார் என்று பயந்து அவரிடம் இந்த விஷயத்தை மறைத்து விட்டோம்.

அண்ணாவிடமிருந்து ஒருநாள் "நான் இந்த தேதியில் பள்ளிக்கு வருகிறேன்' என்கிற தகவல் வந்ததும் நாங்கள் புளகாங்கிதம் அடைந்தோம். இனிமேலும் தலைமை ஆசிரி யரிடம் மறைக்க முடியாது என்கிற சூழ்நிலை யில் அவரிடம் தயங்கித் தயங்கி விஷயத்தைப் போட்டு உடைத்தோம். கடுங்கோபம் கொண்ட அவர் தன்னிடம் கேட் காமல் எப்படி அவ ரை அழைக்கலாம் என்று கேட்டு ஆகாயத்துக்கும் பூமிக்கும் குதித்தார். அவரை மெல்ல மெல்ல ஆசுவாசப் படுத்தினோம். கடைசியில் ஒப்புக்கொண்டார்.

அண்ணாவை வரவேற்பதற்கான கோலாகலமான ஏற்பாடுகளைச் செய்தோம். இராமநாதபுரம் மாவட்டமே விழாக்கோலம் பூண்டிருந்தது. அண்ணாவும் எங்கள் பள்ளிக்கு வருகை தந்தார். அருமையான உரையை நிகழ்த்தினார். மேடைப் பேச்சில் அவருடைய அணுகு முறை மிகவும் வித்தியாசமானது. அன்று எங்கள் பள்ளி மேடையில் ஏறிய அவர் மாணவர்களாகிய எங்களைப் பார்த்து ""நான் எந்த தலைப்பில் பேச வேண்டும் என்று சொல்லுங்கள்..அதில் பேசுகிறேன்..''’என்றார். ஒரு கணம் நாங்கள் திகைத்துப் போனோம். எங்களுக்குள் அவசர அவசரமாகப் பேசி முடிவெடுத்து "நதிகள்'’என்கிற தலைப்பில் பேசுமாறு வேண்டினோம்.

மடை திறந்த வெள்ளம் போல் அந்தத் தலைப்பில் பேச ஆரம்பித்தார் அறிஞர் அண்ணா. மனித வரலாற்றில் ஐயாயிரம் வருடங்களுக்கும் மேலாக நதிகள் எப்படி மனித நாகரிகத்தை மேம்படுத்தின என்பதில் ஆரம்பித்து, இந்திய நாகரீக வளர்ச்சியில் நதிகளின் பங்கு, மற்றும் மேற்கு நாடுகளான சுவிட்ஸர்லாந்து, ஜெர்மனி, இங்கிலாந்து, அமெரிக்கா முதலியவற்றில் நதி நீர் எவ்வளவு அற்புதமாகப் பயன்படுத்தப் படுகிறது என்பது வரை சுமார் ஒன்றரை மணி நேரம் தேனருவி போன்ற பேச்சை அளித்தார். நாங்கள் மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந் தோம். நதிகளின் முக்கியத் துவம் பற்றி அப்போது அவர் பேசிய பேச்சு என் மனதில் பசு மரத்தாணி போல் பதிந் தது. இன் றைக்கும் நான் பேசும் பல கூட்டங்களிலும், எழுதும் கட்டு ரைகளிலும் நதி நீர் இணைப்பின் முக்கியத்துவம் பற்றிச் சொல்வதற்கு அந்தப் பேச்சு ஒரு ஆரம்ப விதை என்றே சொல்லலாம்.

ஐம்பது வருடங்களுக்கு முன் னால் அந்த தீர்க்கதரிசி பேசியது இன்று நிறைவேறக்கூடிய ஒரு சூழ் நிலை மெதுவாகக் கனிந்து வருகிறது. தீர்க்கதரிசிகள் பலரின் கனவுகள் பலிக்கும்போது அவர்கள் இருப்ப தில்லை என்பது வரலாற்றில் சோகமான நடப்பு.

நமது நாட்டில் ஆண்டுதோறும் 1500 BMC நதிநீர் வெள்ளத்தினால் கடலுக்குள் போய் சேருகிறது. அதில் 300 BMC நீரை நாம் உபயோகித்தாலே, நாடு வளம் பெற்று நலம் பெறும். அந்த 300 BMCநீரை எப்படி நாட்டுக்குள் திருப்பி விடுவது என்பதைப் பற்றி நாம் யோசித்து செயல்பட வேண்டிய கட்டத்தில் இருக் கிறோம். நதிநீர் இணைப்பு என் பது இன்று பேச் சளவில் ஒரு கருத்துருவாக்க மாக இருந்தா லும் மிக விரை வில் காலத்தின் கட்டாயத்தினால் அது நனவாகி விடும் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு. ஆனால், பல பேர் முடியாது, முடியாது என்பதை தாரக மந்திரமாக வைத்துள் ளார்கள்.

கரிகாலன் முடியாது என்று நினைத்திருந்தால் தமிழ்நாட்டில் கல்லணை கிடையாது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்க்க முடியாது என்று காந்தியடிகளும், சுதந்திர போராட்ட வீரர்களும் நினைத் திருந்தால், நமக்கு சுதந்திரம் கிடைத் திருக்காது. சி.சுப்பிரமணியமும், எம். எஸ். சுவாமிநாதனும் முடியாது என்று நினைத்திருந்தால் இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்து இருக்காது. வர்கீஸ் கொரியன் முடியாது என்று நினைத்திருந்தால் இந்தியா வெண்மை புரட்சியில் வெற்றி அடைந்து இருக்காது. விக்ரம் சாராபாய் முடியாது என்று நினைத்திருந்தால் இன்று செயற்கைக்கோளை இந்தியா ஏவியிருக்க முடியாது.

முடியாது என்ற நோய் நம்மிடம் பல பேரிடம் அதிகமாக உள்ளது. முடியும் என்று நம்பும் மனிதனால்தான் வரலாறு படைக்கப்பட்டு இருக்கிறது. எனவே நண்பர்களே, முடியும் என்ற நம்பிக்கை கொண்ட 54 கோடி இளைஞர்கள்தான், இந்திய நதிகளை இணைக்க முடியும் என்ற நம்பிக்கை கொண்ட இளைஞர்கள்தான் அனுபவத் தின் துணை கொண்டு வெற்றியை காண வேண்டும். நதிகளை இணைக்க வேண்டும் என்றால் என்ன வேண்டும்... "முடியும்' என்ற நம்பிக்கை முதலில் ஓவ்வொரு இந்தியனுக்கும் வேண்டும்.

ஒவ்வொரு இந்தியனின் மேம்பாட்டுக்காக, மாநிலங்கள் பெருந்தன்மையுடனும், பரந்த மனப்பான்மையுடனும் நதிநீர் இணைப்புக்காக ஒன்றுபட வேண் டும் என்பதுதான் என் அவா. இதற்குத் தேவை கூட்டு மனப் பான்மை (ன்ய்ண்ற்ஹ் ர்ச் ம்ண்ய்க்ள்). எல்லா மனங்களும் இந்த விஷயத்தில் ஒன்றுபட வேண்டும். இந்த கூட்டு மனப்பான்மையை அந்த நாள் முதல் இந்நாள் வரை நான் இராமநாத புரத்து மக்களிடம் பார்க்கிறேன். பொதுப் பிரச்னையில் அவர்கள் எப்போதும் ஒன்றுபட்டே முடிவெடுப் பார்கள்.

ஜனாதிபதியாகப் பதவியேற்றதும் நான் மேற் கொண்ட என்னுடைய முதல் சொந்த ஊர்ப்பயணம் மறக்க முடியாத ஒன்றாக இருந்தது. என்னைக் காண மக்கள் அலை அலையாக வந்து கொண்டே இருந்தார்கள். அவர்களிடம்தான் எத்தனை கதைகள்! எத்தனை சோகங்கள்! எத்தனை போராட்டங்கள்! எத்தனை வெற்றிகள்!

அவர்களுடைய கோரிக்கைகளில் ஒன்று இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் ஒரு அறுவை சிகிச்சை தியேட்டர் வேண்டும் என்பது. கொச்சியில் இருந்த மாதா அமிர்தா மருத்துவ அறிவியல் கழகத்திடம் அதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு நான் வேண்டுகோள் விடுத்திருந்தேன். நானும் ஒரு நிதியை அதற்காக ஒதுக்கியிருந்தேன். அவர்களும் மனம் உவந்து அப்பணிகளை மேற்கொண்டிருந்தார்கள்.

அந்த மருத்துவமனை ஆபரேஷன் தியேட்டர் திறப்பு விழா எனக்கு மிக மகிழ்ச்சியைத் தந்தது. சில வருடங்களுக்கு முன்னால் இதே இராமநாதபுரம் மாவட்டத்துக்கு நான் வருகை தந்த போதும் எண்ணற்ற இளைய சமுதாயத்தைச் சேர்ந்தவர்களைக் கண்டேன். அவர்களிடம் இந்தியா முன்னேறிய நாடாக மாற வேண்டும் என்கிற கனவு கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.

நம்முடைய பக்கத்து நாடுகள் சிலவற்றில் மனித உரிமைகள் நசுக்கப்படுவதை நாம் காண்கிறோம், அந்த நாடுகள் இராமநாதபுரம் மாவட்ட மக்களிடம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய உள்ளது.

நன்றி: நக்கீரன்


வருகிறது மௌனப்புரட்சி! டாக்டர் அப்துல் கலாமின் இளைஞர்கள் காலம்!



டலூர்மாவட்டச் சுற்றுப் பயணத்தின் போதே நான் சிதம்பரம் நகருக்கும் சென் றேன்.அங்கே அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் “Pioneering Spirit: The LearningCentre (செலுத்தும் சக்தியும், கற்றுக் கொள்ளும் மையமும்)’ என்கிற தலைப்பில் உரையாற்ற நான் சென்றேன். பல்கலைக்கழகங்கள் எப்போதுமே என்விருப்பத்துக்கு உரியவை. கல்விக் கண் களைத் திறந்த மாணவர்களை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்லும் ஏணிப்படிகள்தான் பல்கலைக்கழகங் கள்.அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் தோற்றமும் எழிலும் என்னை உவகை கொள்ள வைத்தன.

அங்கிருந்தமாணவர்களும் உற்சாக அலை புரண் டோட பெரும் திரளாக அமர்ந்திருந்தார்கள்.என்னுரை யை முடித்து விட்டு கிளம்பிய என்னை அந்த இளைஞர் மாணவர் படைசுற்றிக் கொண்டது. அவர் களின் அன்பில் நான் திணறிப் போனேன். அவர்கள்என்னிடம் ஒரு கோரிக்கையை வைத்தனர். ""கலாம் சார், நீங்கள் எப்போதுமாணவர்களைச் சந்திக்கப் போனா லும் அவர்களிடம் ஒரு உறுதி மொழியைச் சொல்லி,அவர்களையும் அதைச் சொல்ல வைப்பீர்கள். ஏன் எங்களுக்கு சொல்லவில்லை.இப்போது எங்களுக்கும் அதை நீங்கள் சொல்ல வேண்டும். உங்கள் வார்த்தைகளைக்கேட்டு நாங்களும் அதைப் பின்பற்றிச் சொல்ல வேண்டும்''’’ என்று அன்புக்கட்டளை இட்டார்கள்.

அவர்களின்உந்துதல் சக்தியையும் விருப்பத் தையும் கண்டு நான் அகமகிழ்ந்தேன். உடனேமறுபடி மேடைக்குச் சென்று மாணவர்களுக்கான 10 உறுதி மொழியை அவர்களுக்குசொன்னேன். அரங்கத்தின் உள்ளே இருந்த ஆயிரம் மாணவர் களும், அரங்கத்துக்குவெளியே இருந்த ஆயிரக் கணக்கான மாணவர்களும் ஒன்று சேர்ந்து அந்த உறுதிமொழியை பெரும் சத்தத்துடன் திருப்பிச் சொன்னது இடி முழக்கமாய் இருந்தது.அந்த முழக்க அலையை, இந்தியாவின் குரலை அலைகடல் களையும் தாண்டி உலகத்துக்குஅறிவித்தது போல் எனக்குத் தோன்றியது. உணர்ச்சி வயப்பட்டு உறுதி மொழியைச்சொன்ன பல மாண வர்களின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது. அந்தகண்ணீர் எனக்கு ஒரு நம்பிக்கையின் ஒளியை ஏற்படுத்தியது.

இளையசமுதாயத்தின் அந்த மிகப் பெரும் குரலோசை எனக்கு மீண்டும் உண்மையைஉணர்த்தியது. இளைய சமுதாயம் மிகவும் எழுச்சியுடன் இருக்கிறது. நமதுநாட்டின் முன்னேற் றத்துக்காக அவர்கள் எல்லா வேறு பாடுகளையும் கடந்துஒற்றுமையுடன் குரல் கொடுக்கத் தயாராக இருக்கி றார்கள். இந்தக் காட்சியைஇந்தியா முழுவதிலும் உள்ள எத்தனை எத்த னையோ கல்லூரிகளில், பல்கலைக்கழகங்களில் நான் காண்கிறேன். ஒட்டு மொத்த இந்தியாவிலும் ஏற்பட்டு வரும்ஒரு மௌனப் புரட்சியை இது காட்டு கிறது.

மனமகிழ்வுடன் அவர்களிடமிருந்து நான் விடைபெற்றேன்.

அங்கிருந்து நான் அடுத்துப் பயணப்பட்டது என் சொந்த ஊரான இராமேஸ்வரத்துக்கு- மறக்க முடியாத பயணம் அது..

ஜூலை 25, 2002ல் நான் ஜனாதிபதியாக பதவி ஏற்ற பிறகு, முதல் முதலாக என் சொந்த ஊருக்குச் செல்லும் பயணம்..

எந்தஅலுவல் இருந்தாலும் ஆண்டுக்கு ஒரு முறையாவது நான் ராமேஸ்வரத்துக்குச்சென்று விடுவது வழக்கம். ஆனால் இப்போது இரண்டு வருடங்களுக்குப் பிறகுதான்வரு கிறேன். என் சொந்த ஊரில்தான், என் சொந்த மக்களிடம்தான் எப்படிப்பட்டஎதிர்பார்ப்பு!

மண்டபம்காம்ப் பகுதியில் நான் ஹெலி காப்டரில் இறங்கியபோது அந்தச் சத்தத்தையும்மீறி அங்கே கூடி நின்ற ஆயிரக்கணக்கான இராமேஸ்வரம் பகுதி மக்கள் கரவொலிஎழுப்பி வாழ்த்து சொன்ன போது என் மெய் சிலிர்த்தது.

அவர்கள்ஒவ்வொருவரிடமும் இதயபூர்வ மான அன்பையும், நம்மூர்க்காரர் என்கிறபாசத்தையும் கண்டேன். அங்கிருந்து காரில் சாலைகளில் பயணம் செய்த போது,அந்த ஊரின் மணமும் காட்சிகளும் என் சிறு வயது ஞாபகங்களைக் கிளறி விட்டன.

இதோ இங்கேதான் நான் பிறந்தேன். இங்கேதான் படித்தேன். படிக்கும் போதே, பகுதி நேர வேலையாக செய்தித்தாள் களை விற்றேன்..

இந்தப் பகுதியையே உலுக்கி எடுத்து, தனுஷ் கோடித் தீவையே அழித்து துவம்சம் செய்த பயங்கரப் புயலைப் பார்த் தேன்..

இராமேஸ்வரத்தின்இமாமாக இருந்த என் தந்தையும், இராமநாத சுவாமி கோயிலின் குருக்களான ஷிரிபக்சி லஷ்மண சாஸ்திரிகளும், மேன்மைமிகு பாதிரி போடலும் ஒன்றாக அமர்ந்துஇந்தத் தீவின் பிரச்னைகளை ஒற்றுமையோடு பேசி, அலசி தீர்வுகளைக் கண்டஅற்புதக்காட்சியை இங்கேதான் என் சிறு வயதில் பார்த்தேன்..

இதோஇந்தத் தீவுக்கருகில் இருக்கும் இராமநாத புரத்தில்தான், 1947-ம் வருடம்ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி, இந்தியாவின் முதல் பிரதமர் திரு ஜவஹர்லால் நேருஅவர் கள், நம் நாடு சுதந்திரம் பெற்று விட்டதாக அறிவித்ததை ரேடியோவில்கேட்டுப் பரவசமடைந்தேன்..

இதோஇந்த இராமேஸ்வரத்தில்தான் என்னுடைய பள்ளி ஆசிரியர் சுப்ரமணிய ஐயர், என்மனதில், வாழ்க்கையில் மேலே மேலே உயர வேண்டும் என்கிற லட்சிய விதையைவிதைத்தார்..அந்த விதைதானே என்னை பறப்பதற்கு ஏதுவான விமானவியல் தொழில்நுட்பத்தை படித்து, அது சம்பந்தமான வேலையில் என்னை ஈடுபடுத்த வைத்து,ராக்கெட் இஞ்சினியராக என்னை உயர்த்தியது மற்றும் படிப்படியாக என்னைஉயர்த்தியது..

இதைப் போன்ற கலவையான எண்ணங்களுடன், நெகிழ்ச்சிமிக்க நினைவுகளுடன் காரில் நான் பயணம் செய்தவாறு இருந்தேன்..

என்வீட்டை அடைந்த போது நான் அடைந்த ஆனந்தத்துக்கு அளவே இல்லை. "கலாமின்இல்லம்'’என்கிற பெயர்ப்பலகை அங்கே பொறித்திருந்தது. ஊர்மக்கள், என்சகோதரர் மற்றும் குடும்பத்தினர் என்னை அன்புடன் வரவேற்றார்கள். வீட்டுவாசலில் இருந்த நாற்காலியில் அமர்ந்து அவர்களுடன் பழைய நினைவுகளைப்பகிர்ந்து கொண்டேன். பிறகு மொய்தீன் ஆண்டவர் பள்ளி வாசலுக்குச் சென்றுபிரார்த்தனை செய்தேன்..இந்த ஒவ்வொரு சம்பவமும் என் இளம்பிராயத்துநினைவுகளை இன்பமாய் நினைவூட்டிக் கொண்டே இருந்தன.

இதேபள்ளிவாசலில்தான் சிறுவயதில் என் அப்பாவுடன் சென்று பிரார்த்தனை தொழுகைசெய்வேன். அப்பாவும் அம்மா வும்தான் எனக்குக் குரான் படித்துச் சொல்லித்தந்தார்கள். பள்ளிவாசலில் தொழுதபோது, அந்தக் காட்சிகள்தான் என்ஞாபகத்துக்கு வந்தன. அதிகாலை யில் எழுந்தது முதல் நாள்தோறும் ஐந்து வேளைநமாஸ் செய்வோம்.



இப்போதுநான் பிரார்த்தனை செய்தபோது என் மனநிலை வேறு மாதிரி யாக இருந்தது, மிகுந்தமனதிருப்தி இப்போது நிலவியது, அல்லாவுக்கு நன்றி சொல்லும் விதமாக இப்போதுஎன் பிரார்த்தனை நிகழ்ந்தது. இந்திய நாடும், இந்த உலகமும், இந்தஇராமேஸ்வரத் தீவு மக்களும் எல்லா நன்மைகளும் பெற்று நல்வாழ்வு வாழவேண்டுமென்று எல்லாம் வல்ல இறைவனை நான் உள்ளம் உருக வேண்டினேன்..

பள்ளிவாசலைவிட்டு வெளியே வந்த போது சில சிறுவர்கள் பள்ளிச்சீருடை அணிந்து சாலையில்நடந்து கொண்டிருந்ததைப் பார்த்தேன். அதே போன்றதொரு சீருடை அணிந்து நானும்அப் போது பள்ளிக்குச் சென்ற காட்சி ஒரு சித்திரமாய் என் மனதில் ஓடியது.அந்த நாட்களில் நான் ஒரு தலைவனைக் கண்டேன். அவருடைய உதடுகளில் இருந்துவந்து விழுந்த ஒவ்வொரு வார்த்தைக்காகவும் நான் தவமிருந்தேன்..அவரை நேரில்காண மாட்டோமா என்று ஏங்கினேன்..நான் மட்டுமல்ல, இந்தத் தமிழ்நாடே ஏங்கிக்கொண்டிருந்தது. அவருடைய தேன் தமிழுக்கு மயங்கிக் கிடந்தது.

அந்நாட்களில், அவரைப் பெரும் முயற்சிக்குப் பிறகு எங்கள் பள்ளி விழாவுக்கே அழைத்து வந்து சாதனை புரிந்தோம் நாங்கள்..

அந்தப் பெரும் தலைவன்.. தன்னிக ரில்லாத மேதை..

யார் தெரியுமா?

(தொடரும்)

மாணவ-மாணவிகளுக்கான பத்து உறுதிமொழிகள்!

1. நான் எனது வாழ்க்கையில் நல்லதொரு இலட்சியத்தை மேற்கொள்வேன்.

2. நன்றாக உழைத்துப் படித்து, என வாழ்க்கையிலே மேற்கொண்ட இலட்சியத்தை அடைய முற்படுவேன்.

3. நான் எனது விடுமுறை நாட்களில் எழுதப் படிக்கத் தெரியாத ஐந்துபேருக்காவது எழுதப் படிக்கச் சொல்லிக்கொடுப்பேன்.

4. என் வீட்டிலோ அல்லது பள்ளியிலோ குறைந்தபட்சம் ஐந்து செடிகளையாவது நட்டு அதை பாதுகாத்து வளர்த்து மரமாக்குவேன்.

5.மது, சூதாடுதல் மற்றும் போதைப் பழக்கங்களுக்கு ஆளாகித் துயருறும்ஐந்துபேரையாவது அதிலிருந்து மீட்டு நல்வழிப்படுத்த நான் முயல்வேன்.

6. துயருறும் ஐந்துபேரையாவது சந்தித்து, அவர்களுக்கு ஆறுதல் அளித்து அவர்களது துயரைத் துடைப்பேன்.

7. நான் ஜாதியின் பெயராலோ, மதத்தின் பெயராலோ, மொழியின் பெயராலோ எந்தவித பாகுபாடும் பாராட்டாது எல்லோரிடமும் சமமாக நடந்துகொள்வேன்.

8. நான் வாழ்க்கையில் நேர்மையாக நடந்துகொண்டு மற்றவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்க முயல்வேன்.

9. நான் என் தாய் மற்றும் தாய்நாடு இரண்டையும் நேசித்து, பெண்குலத்திற்கு உரிய மரியாதையையும் கண்ணியத்தையும் அளிப்பேன்.

10. நான், நாட்டில் அறிவு தீபத்தை ஏற்றி அணையா தீபமாக சுடர்விடச் செய்வேன்.

நன்றி: நக்கீரன்

டாக்டர் அப்துல் கலாமின் இளைஞர்கள் காலம்!



ரு தலைவன் கிடைத்தால்...

தமிழகத்தின்அருமைமிகு மக்களே, வாசகர்களே, இளைஞர்களே, உங்களுடன் ஒவ்வொரு “நக்கீரன்’’ இதழிலும் நான் மனம் திறந்து உரையாடப் போகிறேன். என்றுமே எனக்கு மக்களை, குறிப்பாக இளைய சமுதாயத்தைச் சந்திப்பதில் மிகவும் விருப்பம் உண்டு. இதுவரை என் வாழ்நாளில் பல பள்ளிகளுக்குச் சென்று அன்றலர்ந்த மலர்களைப் போல் இருக்கும் குழந்தை களைச் சந்தித்து அவர்களிடம் பல்வேறு சந்தர்ப்பங்களில், பல்வேறு தலைப்புகளில் உரையாற்றி இருக்கிறேன். கிட்டத்தட்ட 1 கோடி மாணவர்களை சந்தித்து அவர்களிடம் உரையாடி, அவர்கள் என்னுடன் சேர்ந்து உறுதிமொழி ஏற்றுள்ளார்கள்.

அப்போதெல்லாம் அவர்கள் என்னிடம் காட்டிய அன்பும், மரியாதையும், நேசமும் என்னால் எப்போதுமே மறக்க முடியாது. என்னையே புதுப்பித்துக் கொண்ட தருணங்கள் அவை. பள்ளிகளில் மட்டும் அல்லாது, கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள், விஞ்ஞான ஆய்வரங்கங்கள், கூட்டங்கள் என்று பல்வேறு சந்திப்பு மையங்களில் நான் கண்ட இளைய சமுதாயம் என்னுள்ளே எப்போதுமே பெருமிதத்தையும், மிகப் பெரிய நம்பிக்கையையும் ஏற்படுத்தி யிருக்கிறது. இந்த நாட்டின் மிகப்பெரிய வளம் மனித வளம். அதுவும் இளைய சமுதாயம் பெரும்பான்மையாக இருக்கக் கூடிய இந்த நாட்டின் மனித வளம் எனக்கு மிகப் பெரிய நம்பிக்கையைத் தருகிறது.

கனல்விடும் இளைய நெஞ்சங்களே சக்தி வாய்ந்ததோர் ஆற்றல் வளம் என்பதை நான் உணர்கிறேன். அதையே தான் எல்லோரிடமும் சொல்லி வருகிறேன். 2020-ம் ஆண்டிலோ அல்லது அதற்கு முன்னாலே கூட, இந்தியா ஒரு வளர்ந்த நாடு ஆகும் என்பது என் கனவு மட்டுமல்ல, ஆதாரங்களைக் கொண்ட நம்பிக்கையும் கூட. இந்த நம்பிக்கைகள் எப்படி ஏற்பட்டன என்கிற தாக்கங்கள் இளைய சமுதாயத்தைச் சென்றடைந்தால் எப்படி இருக்கும் என்று நான் எண்ணியதன் விளைவே, உங்களுடன் நான் உரையாடப் போகும் இந்தத் தொடர்.

ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்கு மிக முக்கியமான ஒன்றாக நான் கருதுவது “கற்பனை திறன் வாய்ந்த லீடர்ஷிப்’ (ஈழ்ங்ஹற்ண்ஸ்ங் கங்ஹக்ங்ழ்ள்ட்ண்ல்) எனப்படும் தலைமைப் பண்புதான். சிறிய அளவில் இருந்து நாட்டின் மிக உயர் பதவிகள் வரை சிறந்த தலைவர்கள் கிடைத்து விட்டால், அந்த நாடு மிக வேகமாக முன்னேறி விடும் என்பது என்னுடைய ஆணித்தரமான கருத்து. எத்தனையோ சந்தர்ப்பங்களில் இதை நான் கண்கூடாகப் பார்த்திருக் கிறேன். நல்ல தலைவனும், நல்ல தலைமைப் பண்புகளும் சுபிட்சத்தைக் கொண்டு வரக்கூடிய ஆதார சக்திகள்.

இதற்கு எடுத்துக் காட்டாக எத்த னையோ உதாரணங்களைச் சொல்லலாம்.

ராஷ்டிரபதி பவனில் இந்திய ஜனாதிபதியாக நான் பதவி வகித்துக் கொண்டிருந்த போது ஒரு நாள்..

தமிழ்நாட்டிலிருந்து சுமார் ஐம்பது கிராமப் பஞ்சாயத்துத் தலைவர்கள் என்னைச் சந்திக்க வந்திருந்தார்கள். அந்த எளிய மனிதர்களைக் காண எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில், மழைத் தண்ணீர் சேமிப்புத் திட்டம் எப்படி செயல்படுத்தப் படுகிறது என்பதை பார்வையிட்டு விட்டு அவர்கள் என்னைக் காண வந்திருந் தார்கள்.

அவர்களிடம் நான், எப்படி கிராமங்கள் தன்முனைச் செயல்பாட்டின் மூலம் தன்னிறைவு கிராமங்களாக மாற முடியும் என்பதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். நான் பேசி முடித்ததும் ஒருவர் எழுந்தார். வேட்டி-சட்டையில் ஒரு கிராமத்து விவசாயியைப் போன்ற தோற்றம். அவர் பெயர் பன்னீர்செல்வம். கடலூர் மாவட்டம், கீரப்பாளையம் கிராமத்திலிருந்து வந்திருப்பதாகச் சொல்லித் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவர், அவருடைய கிராமத்தில் உள்ள அத்தனை வீடுகளுக்கும், சுமார் 1125 வீடுகள், சுகாதாரத் தண்ணீர் வசதிகள் தன்முனைப்புடன், கிராம மக்களின் ஒத்துழைப்போடு நிறைவேற்றப்பட்டிருப்பதாகச் சொன்னார். நேரம் கிடைக்கும் போது தன் கிராமத்துக்கு வந்து அதைக் காணுமாறும் அவர் அன்போடு அழைப்பு விடுத்தார். தன்னிறைவு பெற்ற ஒரு தமிழகத்து கிராமத்தை உடனே காண எனக்கும் மிக விருப்பமாகவே இருந்தது. "கண்டிப்பாக வருவேன்' என்று அவரிடம் சொல்லி எல் லோருக்கும் விடை கொடுத்து அனுப்பினேன். மனதுக்குள் கீரப்பாளையம் கிராமமே சுற்றிச் சுற்றி வந்தது. எனது அலுவலர்களிடம் உதவியாளர்களிடம் சொல்லி சீக்கிரமே ‘கீரப்பாளையம்' கிராமத்துக்குச் செல்லப் பயண ஏற்பாடு செய்யுமாறு சொன்னேன்.

அந்த நாளும் சீக்கிரமே வந்தது. 2004-ம் வருடம் ஆகஸ்டு மாதம் 27-ம் தேதி நான் கீரப்பாளையம் கிராமத்துக்குச் சென்றேன். என் வருகையை நம்ப முடியாத அந்த கிராமப் பஞ்சாயத்துத் தலைவரும், மக்களும் பெரும் ஆரவாரத்துடன் என்னை அன்போடு வரவேற்றார்கள். என்னைச் சூழந்து கொண்ட சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்தவர்கள்... அவர்கள் தயாரிக்கும் பொருட்களின் கண்காட்சிக்கு என்னை அழைத்துச் சென்றார்கள். சுகாதாரம் சம்பந்தப்பட்ட பொருட்களை மட்டுமின்றி உணவு, உடை, பாத்திரங்கள், ஆபரணங்கள், அலங்காரப் பொருட்கள் என்று வகை வகையாய் அவர்கள் செய்து வைத்திருந்த கைவினைப் பொருட்களின் அழகியலையும் தரத்தையும் கண்டு நான் வியந்து போனேன். இந்தப் பொருட்களைச் சுற்று வட்டார மாவட்டங்களில் விற்பதாகவும் அவர்கள் தெரிவித்தது எனக்கு மிகவும் மனமகிழ்ச்சியைத் தந்தது. அவர்களிடம் "பொருட்களை மதிப்புக்கூட்டி நல்ல விலைக்கு வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்யுங்கள்' என்று கூறினேன். மாவட்ட ஆட்சியரிடம், அதற்கான வசதிகளையும் ஏற்பாடுகளையும் செய்யச் சொன்னேன்.

அவர்கள் என்னை அமரவைத்து இனிமையான கிராமத்துப் பாடல்களைப் பாடியபடி நடனம் ஆடினார்கள். அந்த நாட்டார் சங்கீதம் மிக இனிமையாக இருந்தது. கீரப்பாளையம் கிராமமே பல விதங்களில் தன்னிறைவைப் பெற்று சந்தோஷமாக இருந்தது. அந்த கிராம பஞ்சாயத்துத் தலைவர் பன்னீர் செல்வம் தொலைநோக்கு கொண்டவராய், அருமையான தலைமைப்பண்புகள் கொண்ட எளிய தலைவராக இருந்தார். ஒரு சிறப்பான தலைமையின் வழி காட்டுதலில் கிராமம் கம்பீர நடை போட்டுக் கொண்டிருந்ததைக் கண்ணாரக் கண்டேன். அவருக்கு என்னுடைய மனமார்ந்த பாராட் டுதல்களைத் தெரிவித்துக் கொண்டேன்.

இன்னொருவரைப் பற்றி யும் இங்கே நான் குறிப்பிட்டாக வேண்டும். கடலூர் மாவட்டத் தின் ஆட்சியாளராக அப்போது பணியாற்றிக் கொண்டிருந்த திரு. ககன் தீப் சிங் பேடிதான் அவர். சுற்று வட்ட கிராமங்களில் இருந்த பஞ்சாயத்துத் தலைவர் களையும், சுய உதவிக் குழுக் களையும் ஒருங்கிணைத்து கை தேர்ந்த முறையில் உற்சாகப் படுத்தி அவர்களுக்குத் தேவையான உதவிகளை ஒரு தலைவருக்குரிய நற்பண்புகளுடன் செய்து கொண்டி ருந்தார்.

தலைவர்களின் வழிகாட்டுதலி லும், மக்களின் உழைப்பிலும் பல கிராமங்களில் உள்ள குளங்கள் தூர் வாரப்பட்டு, நல்ல தண்ணீரை மக்களுக்கு வழங்கிக் கொண்டி ருந்ததை நான் கண்டேன். கீரப் பாளையம் கிராமத்தில் 5347 பேர் வசித்தார்கள். அவர்களில் ஆண்கள் 3012 பேர், பெண்கள் 2335 பேர். அவர்கள் வசித்த அத்தனை வீடுகளுக்கும் குடிதண்ணீரும், சுகாதாரத்துக்கான தண்ணீரும் குறைவில்லாமல் கிடைத்துக் கொண்டிருந்தது. இதைப் போலவே இந்தியாவின் ஒவ்வொரு கிராமமும் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்கிற ஆசை அப்போது என் மனதில் தோன்றியது. அப்போதுதான் காந்தி கண்ட கனவை நாம் நனவாக்க முடியும்.

ஏன், அது நடக்க முடியாத கனவா என்ன?

இந்த "கீரப்பாளையம்' என்கிற ஒரே ஒரு கிராமம் எனக்கு அந்த உண்மையை ஒரு ஒளிக்கதிர் போல உணர்த்தியது. இந்திய கிராம மக்கள் எல்லோருமே நல்ல மாற்றத்தை மனதார விரும்புகிறார்கள். அந்த மாற்றத்தின் கருவிகளாய் தாங்களும் உழைப்பதற்குத் தயாராகவே இருக்கிறார்கள்.

அவர்களுக்குத் தேவை எல்லாம் ஒரு தலைவன். வழிகாட்ட ஒரு தலைமை. அந்த தலைவன் எங்கிருந்தோ வந்துதிப்பான் என்று இருக்கக்கூடாது. நம்மில் இருந்து, இளைய சமுதாயத்தில் இருந்து, நமது மண்ணில் இருந்து தலைவர்கள் தோன்ற வேண்டும்.

இந்த 21-ம் நூற்றாண்டில், உணர்ச்சிகளுக்கு அப்பாற் பட்டு அறிவார்ந்த சமுதாயத்திற்கு மக்களை இட்டுச்செல்லும் கூடமாக பள்ளிகள் இருக்க வேண்டும், அதற்கேற்றார் போல் பெற்றோர்கள் விளங்க வேண்டும், குழந்தைகளை வழிநடத்த வேண்டும், அவர்களுக்கு நாம் எடுத்துக்காட்டாக விளங்கவேண்டும், அந்த மாற்றத்திற்கு மக்கள் தயாராக வேண்டும்.

அறிவுசார்ந்த சமுதாயம் உருவாக தலைவர்கள், கல்வியாளர்கள், பத்திரிகை மற்றும் டி.வி. ஊடகங்கள், மற்றும் சினிமா, நகைச்சுவை மூலம், நல்ல கருத்துக்கள் அனைத்து தரப்புக்கும் சென்று சேரவேண்டும். அந்த சூழ்நிலையை நமது நாட்டில் தோற்றுவிக்க வேண்டியது அனைவரது கடமையாகும். அந்த மாற்றத்திற்கு நாம் தயாராக வேண்டும். அந்த மாற்றம் மட்டும் சரியாக ஏற்பட்டுவிட்டால் இங்கே மகத்தான மறுமலர்ச்சி ஏற்படும் என்பதில் சந்தேகமே இல்லை.

(தொடரும்)
நன்றி: நக்கீரன்